
ரெய்கிக்கு ஓர் அறிமுகம். ரெய்கி என்ற ஜப்பானியச் சொல் “ரெய்” மற்றும் “கி” என்ற இரு சொற்களின் கலவையாகும். “ரெய்” என்றால் பிரபஞ்சம் அல்லது புனிதம் என்று பொருளாகும். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருளாகும். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல், புனித ஆற்றல், அல்லது பிரபஞ்சச் சக்தி என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலைப் புரிந்து கொண்டு, அதை முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் கலைதான் ரெய்கி கலை.
ரெய்கி என்பது என்ன?
ரெய்கி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக புரிந்துக் கொண்டு, சரியாக பயன்படுத்திக் கொள்ளும் போது, இந்த உலகில் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
ரெய்கி ஆற்றலைப் புரிந்துகொள்ள மின்சாரத்தை எடுத்துக்காட்டாக பயன்படுத்தலாம். மின்சாரம் என்பது ஒரு பொதுவான ஆற்றல். வீட்டின் வயர்களின் மூலமாக உள்ளே நுழையும் மின்சாரம் எந்தப் பொருளில் சேருகிறதோ அந்தப் பொருளுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. வெளிச்சமாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், காற்றாகவும், அசைவாகவும், சேரும் இடத்திற்கேற்ப மின்சாரம் பரிமாணத்தைக் கொள்கிறது. வீட்டில் எத்தனை மின்சாதனப் பொருட்கள் இயங்கினாலும் அத்தனை பொருட்களையும் இயக்கும் அடிப்படை ஆற்றலாக இருப்பது மின்சாரம்தான். எத்தனை நவீனமான, விலையுயர்ந்த மின்சாதனப் பொருளாக இருந்தாலும் மின்சாரம் இல்லாவிட்டால் அவற்றுக்கு இயக்கமில்லை என்பதை நாம் அறிவோம்.
மின்சாரத்தைப் போன்றே ரெய்கியும் எங்குச் சேருகிறதோ, அந்த நபருக்கும், விலங்குக்கும், தாவரத்துக்கும், பொருளுக்கும், இடத்திற்கும், ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. சில ரெய்கி மாஸ்டர்கள் ரெய்கியை உடலின் உபாதைகளையும், நோய்களையும், குணப்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ரெய்கி மனித வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் பயன்தரக்கூடியது.