ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை – 3

உடலின் படைப்பாற்றல்

தாயின் கருவறையில் உங்களை உருவாக்கிய பிரபஞ்ச பேராற்றல் அல்லது படைப்பாற்றல் இப்போதும் உங்களுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் உடலில் உண்டாகும் வளர்ச்சியும் மாற்றங்களும் இதற்கு அத்தாட்சி. மனித உடலின், உள்ளும், புறமும், மனதிலும், உண்டாகும் பல்வேறு தொந்தரவுகள், நோய்கள், காயங்கள், மற்றும் பாதிப்புகள் உடலின் படைப்பாற்றலால் சரி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தும் பெரும்பாலான மனிதர்கள் அவற்றை உணர்வதில்லை.

அனைவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில், காய்ச்சலும், சளியும், மலச்சிக்கலும், சிறுசிறு விபத்துகளும், காயங்களும், உண்டாகி இருக்கலாம். எந்த ஒரு மருந்தும் மருத்துவமும் இல்லாமல் அவை சுயமாக குணமான அனுபவமும் இருக்கலாம். எனக்குத் தலைவலி உருவானதே, மருந்து மாத்திரை உட்கொள்ளாமல் அது எவ்வாறு குணமானது? மலச்சிக்கல் உண்டானதே, எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் அது எவ்வாறு குணமானது? என் உடம்பில் உண்டான காயங்களும் வலிகளும், எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் எவ்வாறு குணமாகின? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு சிந்தித்து அறிந்து கொண்டால் மட்டுமே உங்கள் உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாற்றலை உங்களால் உணர்ந்துக் கொள்ள முடியும்.

உடலின் படைப்பாற்றலால் சிறிய சிறிய தொந்தரவுகளை தானே சரி செய்ய முடியும்? பெரிய நோய்களை அவற்றால் சரி செய்ய முடியுமா? என்ற கேள்வி அறியாமையினால் உருவாகலாம்.

“மனித உடலையும் அவற்றின் உறுப்புகளையும் உருவாக்கிய படைப்பாற்றலால் குணப்படுத்த முடியவில்லை என்றால் வேறு எவரால் அவற்றை குணப்படுத்த முடியும்?”

சுய-சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது

ஒரு நபருக்கு கை கால் வலி உண்டானால், அல்லது உடலின் எந்த பாகத்திலாவது வலி உண்டானால் அவர் தன் கைகளை கொண்டு வலி உண்டான பகுதியை அழுத்தி விடுகிறார். தலைவலி உண்டான நபர்கள் தன் கைகளால் தலையில் அழுத்தம் கொடுக்கிறார்கள். உடலில் ஏதாவது, வலி, நோவு, கடுப்பு, அல்லது எரிச்சல் உண்டானால் அந்த பகுதியை தேய்த்துக் கொடுத்து அவற்றை சரி செய்து கொள்கிறார்கள்.

இதுதான் சுய-சிகிச்சை, நமது உடலில் உண்டாகும் தொந்தரவுகளை நாமே சரி செய்து கொள்வது. இந்த சிகிச்சையை பெரியவர்கள் மட்டுமே செய்வதில்லை. சிறுவ சிறுமிகள் கூட உடலில் ஏதாவது சிறு தொந்தரவுகள் உண்டாகும் போது தன்னை தானே சரி செய்து கொள்கிறார்கள். சுய-சிகிச்சை என்பது, சுவாசம், உணவு ஜீரணம், மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கங்களைப் போன்று மனிதனின் இயல்பு குணம். மனிதனின் தொந்தரவுகளை குணப்படுத்திக்கொள்ள இயற்கை அளித்த சிறப்பு திறன்.

“இந்த இயல்பான குணப்படுத்திக்கொள்ளும் தன்மையை பிரபஞ்ச பேராற்றலின் உதவியோடும், விழிப்புணர்வோடும், நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதுதான் ரெய்கி சுய-சிகிச்சை.”

சுய-சிகிச்சை செய்யும் வழிமுறை

சுய-சிகிச்சை என்பது உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாற்றலுக்கும், உங்களைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச படைப்பாற்றலுக்கும் தொடர்பை உருவாக்கி, அதன் மூலமாக உடல் மற்றும் மனதின் பாதிப்புகளை சரிசெய்துக் கொள்ளும் வழிமுறையாகும்.

இந்த சிகிச்சை முழுமையாக பயனளிக்க சில ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

1. அமைதியாகவும் தளர்வாகவும் அமர்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு பிரபஞ்ச ஆற்றல் உடலுக்குள் ஊடுருவி இயங்க அனுமதிக்க வேண்டும்.

2. அமர்ந்திருந்தால் உள்ளங்கைகள் இரண்டையும் தொடைகளுக்கு மேலே கைகளை விரித்தார் போல் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. படுத்திருந்தால் இரு கைகளையும் உடலை ஒட்டியதைப் போன்றும், உள்ளங்கைகள் மேலே பார்ப்பதைப் போன்று பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

4. அமைதியாக அமர்ந்துக்கொண்டு அல்லது படுத்துக்கொண்டு உச்சந்தலையின் மூலமாக உடலுக்குள் பாயும் பிரபஞ்ச பேராற்றலை உடல் முழுமைக்கும் கொண்டுச் செல்ல வேண்டும்.

5. மனம் மற்றும் கற்பனைத் திறனை பயன்படுத்தி, உச்சந்தலையின் மூலமாக உடலுக்குள் நுழையும் படைப்பாற்றலை தலை முதல் கால் பாதங்கள் வரையில் ஒவ்வொரு உறுப்புக்கும் கொண்டுச் செல்ல வேண்டும்.

6. உடலுக்குள் பரவும் பிரபஞ்ச ஆற்றல் ஒளி பொருந்திய வெள்ளை நிறத்தில் அல்லது, ஒளி பொருந்திய நீல நிறத்தில் இருப்பதை போன்று கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

7. சுவாசத்தின் மூலமாக பிராண சக்தியும், உச்சந்தலையின் மூலமாக பிரபஞ்ச சக்தியும் உடலின் ஒவ்வொரு உள் மற்றும் வெளி உறுப்புக்கும் பரவி அந்த உறுப்புகளை பலப்படுத்துவதையும் அவற்றின் இயக்கங்களை சீர் செய்வதையும் கற்பனையில் கவனிக்க வேண்டும்.

8. மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் வழிமுறைகள், அனைத்து சுய-சிகிச்சை மற்றும் சுய-பிரகடனம் செய்வதற்கும் பொருந்தும்.

9. சுய-சிகிச்சையை இரவு உறங்குவதற்கு முன்பாக செய்வது சிறப்பாக இருக்கும்.

10. பழங்களை மட்டும் உட்கொண்டு விட்டு அல்லது இரவு உணவை குறைவாக உட்கொண்டு விட்டு சுய-சிகிச்சை செய்வது சிறந்தது.

11. சுய-சிகிச்சைக்கு பிறகு தண்ணீரை தவிர வேறு எதையும் உட்கொள்ள வேண்டாம்.

சுய-சிகிச்சை உதாரணம்

Image by Freepik

மேலே உள்ள படத்தில் சுய-சிகிச்சை செய்யும் போது கைகளை எவ்வாறு வைத்துக் கொள்கிறார்கள் என்பதையும், எவ்வாறு தொடுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். நன்றாக உள்வாங்கி கொண்ட பிறகு சுய-சிகிச்சை செய்ய தொடங்குங்கள்.

முகத்தில், தலையில், உடலின், கை கால்களில், உடலின் மேலே கீழே, முன்னே பின்னே, என்று ஒவ்வொரு உறுப்பையும் எவ்வாறு உள்ளங்கைகளால் தொட வேண்டும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். மற்றவை சுயமாக புரியும், உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உங்களுக்கு தெரியாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X