ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை

மனிதர்களின் தடை

மனிதர்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் தங்களின் நோய்களையும் காயங்களையும் குணப்படுத்திக் கொள்ள பிற உயிரினங்களை நம்பி இருப்பதில்லை. தனக்குள்ளே இருக்கும் படைப்பாற்றலை நம்பி அந்த படைப்பாற்றலின் உதவியுடன் தனது நோய்களையும் உடல் பாதிப்புகளையும் அவை குணப்படுத்திக் கொள்கின்றன. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அத்தனை உயிரினங்களும் தங்களின் உபாதைகளை தாங்களே சரிசெய்து கொள்ளும் பொழுது, ஆறறிவை உடைய மனிதர்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்துகொள்ள முடிவதில்லை?

மருந்தும், மாத்திரையும், மருத்துவமனையும், மருத்துவர்களும், இல்லாமல் தங்களின் தொந்தரவுகள் குணமாகமாட்டா என்று பெரும்பாலான மனிதர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக தலைவலி முதல் விபத்து வரையில் அத்தனை உடல் உபாதைகளுக்கும், மருந்து, மாத்திரை, மருத்துவர், மருத்துவமனை, என்று எதையாவது எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உருவாகிறது.

“அவர்களின் நம்பிக்கையே, அவர்களின் தொந்தரவுகள் குணமாகாமல் இருப்பதற்கான காரணமாக அமைகிறது.”

உடலின் சுய இயக்கம்

சூனியத்திலிருந்து உருவாக்கப்பட்ட தனது உடலையும், அந்த உடலில் யாருடைய கட்டளையும் உதவியுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும், சுவாசம், இரத்த ஓட்டம், சீரணம், கழிவு நீக்கம், மூளையின் இயக்கம்; மற்றும் இருதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் இயக்கம்; இவற்றைக் கவனித்தாலே, புரிந்துக் கொண்டாலே, தன்னை படைத்ததும், தன்னை இயக்குவதும், தனக்குள்ளே கலந்திருப்பதும், எத்தகைய தன்மைக் கொண்ட பேராற்றல் என்பதை மனிதன் புரிந்துக் கொள்வான்.

அந்த பேராற்றலை புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு, அத்தனை வகையான உடல் மற்றும் மனம் சார்ந்த தொந்தரவுகளும் குணமாகும். வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களும் சேர்ந்து, வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

மனிதனும் உபாதைகளும்

மனிதனின் மனதில் பதியும் தீய எண்ணங்களும், வாழ்க்கையில் அனுபவம் செய்த தவறான விசயங்களும், மனித மனதில் உண்டாகும் அத்தனை பாதிப்புகளுக்கும் மூல காரணிகளாக இருக்கின்றன. மேலும் மனதில் உண்டாகும் பாதிப்புகளும், உடலில் சேரும் கழிவுகளும் அந்த மனித உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளுக்கும் நோய்களுக்கும் மூல காரணிகளாக இருக்கின்றன என்று இயற்கை மருத்துவங்கள் கூறுகின்றன.

உடலின் ஆற்றல் (energy) நிலையிலும், இயக்க நிலையிலும் (system) உண்டாகும் ஆற்றல் குறைபாடுகளும், உடலில் சேரும் தீய ஆற்றல்களும் (negative energy) தான், உடல் மற்றும் மனதில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு மூல காரணங்கள் என்று ரெய்கி போன்ற ஆற்றல் மருத்துவங்கள் கூறுகின்றன.

மனிதன் தன் கர்மேந்திரிங்களால் அனுபவம் செய்யும் விசயங்களும், மன நிலையில் உண்டாகும் மாற்றங்களும், மனதில் உண்டாகும் தவறான பதிவுகளும் தான், மனிதனுக்கு உண்டாகும் அத்தனை வகையான உடல் மற்றும் மன நோய்களுக்கும் மூல காரணங்கள் என்று உளவியல் மருத்துவ முறைகள் கூறுகின்றன.

அடிப்படையில் மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள், ஆற்றல் நிலையில் மாற்றங்களை உருவாக்கி, உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக உடல் நிலையில் தொந்தரவுகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு உடலில் உருவாகும் ஒரு நோய் அல்லது தொந்தரவு, பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு முன்பாகவே மனத்தில் உருவாகிவிடுகிறது.

பல மாதங்களாக, வருடங்களாக, மனதில் தேங்கி நிற்கும் பதிவுகள் அல்லது பாதிப்புகள், உடலின் ஆற்றல் நிலையை பாதித்து, உடலின் உறுப்புகளை பாதித்து, இறுதியாக உடலில் தொந்தரவுகளாக வெளிப்படுகின்றன. தொடக்க நிலையில், அதாவது மன நிலையில் இருக்கும் போதே பாதிப்புகளை சரிசெய்துக் கொண்டால், உறுப்புகளில் ஆற்றல் குறைபாடுகளும் உடலின் பாதிப்புகளும் உருவாகாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

“மனிதனின் மனதை சீர் செய்து, அந்த மனதின் உதவியுடன், இயற்கையில் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றலை உடலுக்குள் கிரகித்துக் கொள்ள வேண்டும்.”

உடலின் பாதிப்புகள் மற்றும் நோய்கள்

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, மருந்தும், மருத்துவமும், மருத்துவர்களும், மருத்துவமனைகளும், மருந்தகங்களும், இப்போது அதிகரித்துவிட்டன. சிகிச்சை முறைகள், சிகிச்சை இயந்திரங்கள், மற்றும் அறுவை சிகிச்சைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும், இன்றைய கால கட்டத்தில் நோய்களின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வேலைப்பளு, தவறான வாழ்க்கைமுறை, மற்றும் இரசாயன பயன்பாடுகள் தான், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். ஆனாலும், துரித உணவுகளை உட்கொள்ளாத, வேலைப்பளு இல்லாத, இரசாயன பயன்பாடும் பதப்படுத்திய உணவுகளும் இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றும் கிராமவாசிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் நோய்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனவே. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை பற்றிய அக்கறை அதிகரித்துள்ள இன்றைய காலக் கட்டத்தில் நோய்களும் நோயாளிகளும் அதிகரித்துக் கொண்டே போவதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

ஆம்… மனதில் உண்டாகும் பாதிப்புகள் நோய்களாக உடலில் பிரதிபலிக்கின்றன. சிறுவயது முதலாக, கல்வி, வேலை, எதிர்காலம், என்று உருவாக்கப்பட்ட ஆசையும் அச்சமும் மனதில் பதட்டத்தையும் பயத்தையும் பேராசையையும் உருவாக்கி விடுகின்றன. அவற்றின் காரணமாக மன அழுத்தங்களும் மனம் தொடர்பான பாதிப்புகளும் உருவாகின்றன.

சிறுவயதிலேயே, நீ மருத்துவர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும், பொருளியலாளர் ஆகவேண்டும் என்று பெற்றோர்களின் கண்டிப்பில் தொடங்குகின்றன மன பாதிப்புகள்; பள்ளிக்கூட பாடத்திட்டம், சமுதாய அமைப்பு, சினிமா காட்சிகள், சமூக ஊடகங்கள், போன்றவற்றால் அவை மேலும் அதிகமாகின்றன. இக்காரணங்களினால், போட்டி, பொறாமை, கவலை, கர்வம், எரிச்சல், பொறாமை, துக்கம், பயம், போன்ற எதிர்மறை குணங்கள் உருவாகின்றன.

“தவறான குணாதிசியங்களும் மன பதிவுகளும் பின்னாட்களில் நோய்களாக உடலில் பிரதிபலிக்கின்றன.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X