ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை. ரெய்கி கலையில், தியானமும் சுய-சிகிச்சையும் (self healing) மிகவும் முக்கியமான தினசரி பயிற்சிகளாகும். இவற்றை ஒழுக்கத்துடன் தினமும் பயிற்சி செய்து வந்தால் உடல் மற்றும் மனதின் உபாதைகள் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும். தனிநபர், குடும்பம், தொழில், பொருளாதாரம், சமுதாயம், என அனைத்து நிலைகளிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய-சிகிச்சை செய்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், ஹீலிங் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துக்கொண்டு பின்பற்றும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி செய்துவந்தால், உடலின் பாதிப்புகள், மனதின் பாதிப்புகள், குடும்ப பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வாழ்வியல் பாதிப்புகள், மற்றும் அனைத்து வகையான தொந்தரவுகளும் நீங்கி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

கூடிய விரைவில் இந்நூலில் உள்ள பயிற்சிகள் எனது குரலில் காணொளிகளாக நமது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும். அவற்றைக் காண விருப்பமுள்ளவர்கள் நமது யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். நான் எழுதிய பல நூறு கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் நமது இணையதளங்களில் உள்ளன அவற்றையும் வாசித்து பயன்பெறவும்.

சுய சிகிச்சை

கடல் நீரின் நடுவே வாழும் மீன்களைப் போன்று, பிரபஞ்ச பேராற்றலின் நடுவே தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீன்களின் கண்களுக்கு தண்ணீர் தனியாக தெரிவதில்லை; நாம் தண்ணீரில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் மீன்களுக்கு தெரிவதில்லை. அதைப்போன்றே பிரபஞ்ச பேராற்றலின் நடுவே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதனை மனிதர்களால் காண முடிவதில்லை, அதனை அவர்கள் உணர்வதுமில்லை.

உடலின் அழுக்குகளை நீக்குவதற்கு தண்ணீர் பயன்படுவதைப் போன்று உடலின் தேவையற்ற ஆற்றல், அலை, மற்றும் அதிர்வுகளை நீக்குவதற்கு பிரபஞ்ச பேராற்றல் பயன்படுகிறது. அந்த பிரபஞ்ச பேற்றலை புரிந்துக் கொள்வதும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்வதும் தான் ஹீலிங் கலை

தொலைதூர சிகிச்சை யந்திரம்

இந்நூலுடன் நான் வரைந்த தொலைதூர சிகிச்சை (டிஸ்டன்ஸ் ஹீலிங்) யந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. சுய-சிகிச்சை செய்வதற்கு முன்பாக அதனை சிறிதுநேரம் பார்த்து, ஆற்றல்களை கிரகித்துக் கொண்டு, பின்னர் சிகிச்சையை தொடங்கலாம்.

இந்த யந்திரம் நமது இணையதளத்தில் PDF வடிவில் தனியாக கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்து, காகிதத்தில் அச்செடுத்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது அந்த யந்திரத்தை தொட்டு அல்லது சிறிது நேரம் பார்த்து அதன் ஆற்றலை கிரகித்துக் கொள்ளலாம்.

மந்திரம், யந்திரம், தந்திரம், அனைத்துக்கும் அப்பாற்பட்ட எல்லையில்லா பேராற்றலான, இறை ஆற்றலும், பிரபஞ்ச ஆற்றலும் உங்களுக்கு எப்பொழுதும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கும். சந்தோசம்.

மனித படைப்பு

எந்த ஒரு முன்னுதாரணமும், வழிகாட்டுதலும் இன்றி, பிரபஞ்ச பேராற்றலின் தூண்டுதலின் பேரில் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டவர் நீங்கள். உடல், மனம், உணர்வு, சிந்தனை, என்ற கூறுகளின் அடிப்படையில் உங்களை முழுமையாக ஒத்த அமைப்பில் உங்களுக்கு முன்பாக இந்த உலகில் யாரும் இருந்ததில்லை, உங்களுக்குப் பின்பாகவும் யாரும் தோன்றப் போவதில்லை.

தாயின் கருவறையில் தாய், தந்தை, மருத்துவர், என எவருடைய தேவையும் உதவியும் இன்றி இயற்கையால் உருவாக்கப்பட்டவர் நீங்கள். உங்கள் உடல் உருவான இடம் தாயின் கருவறையாக இருந்தாலும், அங்கே உங்களை உருவாக்கிய பிரபஞ்ச பேராற்றல் அல்லது படைப்பாற்றல் தான் உங்களின் உண்மையான தாய் மற்றும் கடவுள் என்று கூற வேண்டும். உங்களை உருவாக்கிய அந்த எல்லையில்லா பேராற்றல் இப்போது எங்கே இருக்கிறது? சிறிது நேரம் சிந்தித்துவிட்டு பிறகு தொடர்ந்து வாசியுங்கள்.

“கடவுள் இந்த உலகத்தைப் படைத்த பிறகு ஓய்வெடுக்க எண்ணினார். எங்கே சென்று ஓய்வெடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இறுதியில், மனிதர்கள் எப்போதும் தனக்குள்ளே காணாமல், தனக்குள்ளே தேடாமல், எதையுமே வெளிப் பார்வையாக வெளியில் மட்டுமே தேடுவார்கள் என்பதனால் மனிதர்களின் இருதயத்துக்குள் கடவுள் மறைந்து கொண்டார்” என்ற ஒரு கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

“இந்த கதையில் வரும் கடவுளுக்கு ஒப்பானது உங்களின் படைப்பாற்றல். அந்த கடவுள் படைத்த உலகம் நீங்கள் தான்.”

படைப்பு சக்தி

மனிதன் இந்த பூமிக்கு சிறு குழந்தையாக வருகிறான். இரண்டிலிருந்து மூன்று கிலோ எடையுடைய குழந்தையாகப் பிறந்த அவன், சிறுவனாக, இளைஞனாக, பெரியவனாக தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கிறான். பிறந்த பிறகும் மனிதனுக்குள் வளர்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. உடல் வளர்கிறது, பற்கள் முளைக்கின்றன, உடலின் உறுப்புகளில் பல்வேறு மாறுதல்கள் நடைபெறுகின்றன, இறுதிவரையில் முடிகளும் நகங்களும் வளர்கின்றன.

அவ்வாறென்றால் படைப்பும், உருவாக்கமும், மாற்றமும், மனித உடலில் என்றென்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பது தெளிவாகிறது அல்லவா? இவற்றின் மூலமாக படைப்பாற்றல் மனிதனுக்கு உள்ளே இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா? சூனியத்திலிருந்து ஒரு மனிதனை உருவாக்கத் தெரிந்த பேராற்றலுக்கு, தனது உருவாக்கத்தில் ஒரு குறை உண்டானால் அவற்றை சீர் செய்யத் தெரியுமா தெரியாதா?

“மனித உடலையும் மனதையும் உருவாக்கிய பேராற்றலுக்கு அவற்றை சீர் செய்யும் ஆற்றல் இருக்குமா இருக்காதா? சற்று சிந்தித்துவிட்டு தொடருங்கள்.”

குணப்படுத்தும் சக்தி

மனிதர்களின் இடையூறுகள் இல்லாத காடுகளை பாருங்கள், இயற்கையில் வாழும் உயிரினங்களை பாருங்கள். மனிதர்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினத்திற்காவது மருத்துவமனைகள் உள்ளனவா? வேறு எந்த உயிரினமாவது மருத்துவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனவா? மனித இனத்தைப் போன்றே பிற உயிரினங்களுக்கும் நோய்கள் உருவாகின்றன, விபத்துகள் நடக்கின்றன. மருத்துவர்களும், மருத்துவமனைகளும், மருந்துகளும், அறுவை சிகிச்சைகளும், இல்லாமல் எவ்வாறு பிற உயிரினங்கள் தங்களின் உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்கின்றன?

உங்களைச் சுற்றி வாழும் விலங்குகள் விபத்துகளில் சிக்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு சில வாரங்களில் அவை குணமாவதையும், பழைய நிலைமையில் ஆரோக்கியமாக செயல்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். விபத்தில் சிக்கிய அந்த விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டனவா? அந்த விலங்குகளின் காயங்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டனவா? அந்த விலங்குகளின் காயங்களுக்கு கட்டுகள் போடப்பட்டனவா? அவற்றுக்கு சிகிச்சை அளித்தது யார்? அவற்றின் காயங்களை குணப்படுத்தியது யார்?

“கடவுள்! அந்த விலங்குகளை உருவாக்கிய கடவுள். மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் படைப்பாற்றல் உள்ளன அல்லவா, அவைதான் அந்த உயிரினங்களை குணப்படுத்துகின்றன.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X