Holisticrays

டாக்டர் மிகவோ உசுய்

ரெய்கி கலையை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிகவோ உசுய் (Dr. Mikao Usui) அவர்கள். இவர் ஜப்பானில் உள்ள தனியாய் என்ற ஊரில் 15 ஆகஸ்ட் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1920களில் ஜப்பானில் “யமா” என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஆன்மிகப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அந்தப் பயிற்சிக்காக ஜப்பானில் உள்ள குரமா என்ற மலையின் மீது 21 நாட்கள் விறதத்திலும் தியானத்திலும் இருந்தார். குரமா என்பது ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடிய கடுமையான பயிற்சியாகும். மலையில் இருந்த அந்த 21 நாட்களில் “கீ” என்ற பிரபஞ்ச ஆற்றல் இயங்குவதை அவர் உணரத் தொடங்கினார். பிரபஞ்ச ஆற்றலை கொண்டு மனிதர்களின் நோய்களையும் பிரச்சனைகளையும் சரிசெய்யலாம் என்பதை தியான நிலையில் அவர் உணர்ந்துக் கொண்டார்.

பயிற்சி முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவர், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு நோய்களைக் குணப்படுத்தவும், பிரச்சனைகளிலிருந்து விடுப்படவும், இந்த ஆற்றலை பயன்படுத்தி உதவிகள் செய்தார். வெறும் 21 நாட்கள் ஒருவர் பயிற்சி செய்தால் இந்த நிலையை அடைந்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இளம் பருவம் முதலாக அவரிடமிருந்த ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும், முறையான உணவு முறையும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும்தான் அவர் இந்த நிலையை அடைவதற்கு காரணமாக இருந்தன.

மிகவோ உசுய், அவரின் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சி அளித்தார். அவர்களில் 16 நபர்கள் மட்டுமே மாஸ்டர் அல்லது “Shinpiden” என்ற நிலையை அடைந்தார்கள். டாக்டர் மிகவோ உசுய் அவர்கள் 9 மார்ச் 1926 இல் காலமானார்கள்.

டாக்டர் சுஜிரோ ஹயாஷி

டாக்டர் சுஜிரோ ஹயாஷி (Dr. Chujiro Hayashi) அவர்கள் டாக்டர் மிகவோ உசுய் அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ல் தோக்கியோவில் பிறந்தார். இவர் டாக்டர் மிகவோ உசுய் அவர்களிடம் ரெய்கி பயின்று டோக்கியோ, ஜப்பானில் ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கி நடத்தி வந்தார்.

ரெய்கியை ஒரு ஆன்மீக பயிற்சி என்பதிலிருந்து, ஒரு மருத்துவ முறையாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இவர் 1940 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி காலமானார்.

திருமதி ஹவயோ ஹிரோமி தகத

திருமதி ஹவயோ ஹிரோமி தகத (Hawayo Hiromi Takata), அமெரிக்காவில் ஹவாயில் 1900 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தவர். ரெய்கி மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கும், இன்று உலகம் முழுவதும் பரவி, பிரபல்யமாக இருப்பதற்கும் இவர் முக்கிய காரணமாவார்.

செவிவழி செய்தியாக கூறப்படும் ஒரு சம்பவம். திருமதி தகத தனது குடும்பத்தாரை சந்திப்பதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்தார். ஜப்பானில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் நோய்வாய்ப்படுகிறார். அவரின் நோயை குணப்படுத்துவதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சையில் உடன்படாத திருமதி தகத அதற்கு ஏதாவது மாற்று மருத்துவம் இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

அவரது நோயை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவ முறையை அறியாததால் இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார். அறுவை சிகிச்சைக்கு தயாராகும் வேளையில் அவரின் செவிகளில் “உன் நோய்க்கான மருத்துவம் தோக்கியோவில் இருக்கிறது அங்கே செல்” என்று ஒரு அசரீரி ஒலிக்கிறது. உடனே அறுவை சிகிச்சையை ரத்து செய்துவிட்டு டோக்கியோவிற்கு புறப்படுகிறார். தோக்கியோவில் டாக்டர் ஹயாஷியின் கிளினிக்கில் ரெய்கி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைகிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஜப்பான் பல போர்களில் கலந்து கொண்டிருந்தது. ஆண்கள் அனைவரும் கட்டாயமாக போர்களில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டார்கள். ரெய்கி கலையை அறிந்த அத்தனை ஆண்களும் போரில் மடிந்துவிட்டால்; இந்தக் கலை அழிந்துவிடும் என்பதாலும், மேலும் வெளிநாட்டில் வாழும் பெண் என்பதாலும் டாக்டர் ஹயாஷி திருமதி தக்கதவுக்கு ரெய்கியை பயிற்சி அளித்தார். திருமதி தக்கத மூலமாக இந்தக் கலையை வெளிநாட்டில் பாதுகாக்க எண்ணினார்.

திருமதி தகத ரெய்கியை முழுமையாக கற்றுக்கொண்டு அமெரிக்கா திரும்பி அங்கு ஒரு ரெய்கி கிளினிக்கை தொடங்கினார். அவர் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் ஜப்பானியர் அல்லாதவர்களுக்கும் ரெய்கி கலையை கற்றுத்தரத் தொடங்கினார். அமெரிக்காவிலிருந்து இந்தக் கலை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இன்று உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் ரெய்கியினால் பயன் பெற்று வருகின்றனர். அதன் வரிசையில் நீங்களும் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள்.

Leave a Reply

Shopping cart
There are no products in the cart!
0